பெரும்பாலான முதலாளித்துவ நாடுகள், தங்கள் காலனி நாடுகளில் நிகழ்த்திய ஆட்சி என்பது கிட்டத்தட்ட ஒரு Outsourcing போன்றதுதான். தங்களுடைய காலனி நாட்டு மக்களின் மூடப்பழக்கங்கள் போன்றவற்றையோ, சாதி, இன, மத பேதங்களையோ, நியாயமற்ற போக்குகளையோ பெரும்பாலும் “காணாத” கண்களையே கொண்டிருந்தனர். தங்கள் நோக்கம் வியாபாரமோ, சுரண்டலோ, எப்பெயர் கொண்டு அழைப்பினும் பணம் சேர்ப்பது மட்டுமே.

ஆனால், குவர்னர் துய்மா, தனக்கு முந்தய ஆட்சியாளர்களிடமிருந்து இவ்விசயங்களில் கொஞ்சம் மாறுபட்டுத் தெரிகிறார். கோகிலாம்பாளிடம் தகாது நடக்க முயலும் ஒரு ஸோல்ஜருக்குத் தண்டனை தருவதிலும், வலங்கை இடங்கை சாதிப் பிரிவினரிடையே நிகழும் ராஜ வீதி நுழைவு சம்பந்தமான பிரச்சனையில் அனைவரும் அத்தெருவைப் பயன்படுத்த ஆணை பிறப்பிப்பதிலும் ஒரு குறைந்தபட்ச நீதியை அவர் உறுதிசெய்கிறார். ஆனால், வருமானம் வருவதற்கான வழிமுறைகள் ஏதேனும் இருப்பின் அதன்பொருட்டு எந்த எல்லைக்கும் செல்வதற்கும் அவர் தயங்குவதில்லை. குறிப்பாக போர்க்காலத்தில் விதிக்கப்படும் புதிய / அதிக வரிகளை சொல்லாம். இக்குணமே துய்மாவை ஒரு முழு மனிதாபிமானியாக எண்ணுவதற்குத் தடையாக அமைகிறது.
நாவலின் பிற பாத்திரப்படைப்புகளில் இருந்து தனித்துத் தெரியும் ஒரு முகமாக கோகிலாம்பாளைச் சொல்லலாம். கோவில் தாசி என்றபோதும் தன்னுடைய சுயத்தை இழக்காதிருக்க அவள் நிகழ்த்தும் போராட்டங்கள், அதனால் ஏற்படும் சிக்கல்களை அவள் சமாளிப்பது, ஒரு போரைத் தவிர்ப்பதற்கான யோசனையை “மோஹனா”வுக்கு சொல்வது, மதமாற்ற பிரச்சாரம் மேற்கொள்ளும் பாதிரியுடனான விவாதம் என தனித்து ஒலிக்கும் ஒரு கலகக் குரல் கோகிலாம்பாளுடையது.

இந்த நாவலுக்குள் வரும் பல சந்தர்ப்பங்கள் தாமே தனித்த கதையாக கூறப்படுவதற்குறிய சாத்தியக் கூறுகள் கொண்டவை. உதாரணமாக, விளைந்து நிற்கும் “வெள்ளைப் பூண்டின்” நிலம் மராட்டிய படை கடந்து போனதால் சீரழிந்து போனதையும், அதனால், விளைச்சலைக் கொண்டு தன் மகள் செம்பருத்தியின் திருமணத்தை நடத்த எண்ணியிருக்கும் வெள்ளைப் பூண்டின் ஆசை நிராசையான சம்பவத்தை சொல்லலாம்.
இந்நாவலில் காட்டப்படும் சாமானியரின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. குறிப்பாக சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைக்கு வைக்கப்பட்ட முருகன் பெயரை மாற்றுதல், தியாகராஜ முதலியார் தன் சம்பந்தி முதலியார் மூலம் அடிமைகள் வாங்குவது, அதற்கான கிரயசாசனப்பத்திரம், உயர் ஜாதி மாடுகளை கவனித்துக்கொள்ள வழங்கப்படுவது குறிப்புகள், அதே சமயம் அடிமைகளாக கருதப்பட்டவர்களை “கவனித்துக்கொள்ள” வழங்கப்படுவதோ சவுக்கு என பல சம்பவங்கள் நம் வரலாற்றின் கொடுமைகளைப் பேசுபவை.
ஒரு பெரும் போர் சில மதுக்குப்பிகளால் தவிர்க்கப்படுதல், சித்துஜியை வீழ்த்தி, அரியணை அமரும் சாயாஜிக்கும் பிரதாப சிம்மரால் அதே முடிவு நேர்தல், அரசனுக்கு மிகவும் நெருங்கியிருக்கும் பலரும், உண்மையில் அந்தப் பதவிக்கே விசுவாசமாக இருக்கும் நிலை, கவிராயைத் தவிக்க விடும் அனவரதம் பிள்ளை, அவரிடம் பேரம் பேசி காரியம் சாதிக்கும் நிலையில் இருக்கும் அரசு என பல சம்பவங்கள் மூலமாக அக்காலகட்ட அரசாங்க நிலை தெளிவாகிறது.
இந்நாவலின் முக்கிய அம்சமாக நான் கருதுவது பகடி. சின்னச் சின்ன விவரணைகள், குறிப்புகள் பலவும் நம்மை பெரும் சிரிப்பில் ஆழ்த்துபவை. மோஹனாவுக்கு கொய்யாப்பழம் தின்ன ஏற்பட்ட ஆசையை நிறைவேற்ற படாதபட்டு கொண்டு வரப்படும் கொய்யாப்பழங்களுக்கு நேர்ந்த கதி, “சீந்துவார் அற்று மெலிந்த இறைவர், அவரை நம்பி மேலும் இளைத்துப்போன இறைவி” போன்ற விவரணைகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
தமிழில் காணக்கிடைக்கும் பெரும்பாலான வரலாற்று நாவல்கள், இருந்திராத பொற்காலத்தை பேசுபவை. மேலும், ”இந்திர”, “சந்திர” அம்சம் கொண்ட மன்னர்களின் பெருமையை கூறுபவை. ஆனால், “மானுடம் வெல்லும்” நாவல் ஒரு காலகட்டத்திய வரலாற்று ஆவணமாக கருதப்படக்கூடியது. அதிகாரத்தில் இருப்பவர்களும், அவரை அண்டிப் பிழைப்பவர்களும் ஒரு “பெருவாழ்வு” வாழ்ந்த அதே காலகட்டத்தில், சாதியின் பெயரால், பழமையின் பெயரால் எவ்வித அடிப்படை அறமும் இன்றி ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தார்கள் என்பதை இந்நாவல் சிறப்பாகக் கூறுகிறது.
இந்நாவலின் பெரும்பாலான கதை மாந்தர்கள் (துய்மா, ஆனந்தரங்கப்பிள்ளை, கனகராய முதலி, சந்தா சாயிப் etc), வரலாற்றில் தடம் பதித்த உண்மை மனிதர்கள் என்பதும், நாவலின் பிரதான சம்பங்களுக்கான ஆதாரமாக ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள் இருப்பதும், மற்ற வரலாற்று புனைவு நாவல்களில் இருந்து “மானுடம் வெல்லும்” ஐ தனித்துக் காட்டுகிறது.
பலவகைகளில் வரலாற்றின் நாம் அறியாத பக்கங்களைப் பேசும் “மானுடம் வெல்லும்” ஒரு முக்கியமான நாவல்.
காளீஸ்வரன், கோவை