“மானுடம் வெல்லும்” பாண்டிச்சேரியை மையமாக வைத்து, பிரெஞ்சு ஆளுநர் டூமாஸின் ஆட்சி காலத்தை பற்றி பேசும் நாவல்.ஆனந்த ரங்கம் பிள்ளை என்ற அரசு அலுவலரின் நாட்குறிப்பைக் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதால் மற்ற வரலாற்று நாவல்களிருந்து இது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நாவலை மூன்று பிரிவுகளில் அணுகலாம்.
*1. அழகியல் பார்வை 2.வரலாற்றுப் பார்வை 3.போதாமைகள் அல்லது குறைகள்.*
_அழகியல் பார்வை_ , _ஒரு தாசி மேலே நோக்கியவாறு, தனது கையால் வானத்தைபிடிக்க பார்க்கிறாள்!_ என நாவல் தொடங்குகிறது.வாழும் காலத்திலே பதிவு செய்யப்பட்ட நாட்குறிப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதே, இந்த நாவலின் பலம் மற்றும் பலவீனம் என கொள்ளலாம்.அதாவது இந்த நாட்குறிப்பே நம்மை வரலாற்றுக்கு நெருக்கமாக கொண்டு செல்கிறது அதுவே அதன் இலக்கிய தன்மைக்கு(கவித்துவம், படிமம், தரிசனம்) தடையாக இருந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.அதனால்தான் என்னவோ “தாசி வானத்தை பிடிக்க பார்கிறாள்” போன்ற படிமங்களை, பிற்பாடு நாவலில் அதிகமாக காணமுடியவில்லை. இந்த எழுத்து முறையை எதார்த்த வாதம்(சில இடங்களில் இயல்புவாதம் போல் வெளிப்பட்டது) என கொள்ளலாம்.நாவலின் Authenticity மட்டும் இல்லாமல், அதன் உள்ளடக்கத்தின் செறிவும் தானாகவே அதன் அழகியலின் போதாமைகளை காண்பிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
_வரலாற்று நோக்கு_ – _இரண்டு பண்பாடுகளின் மோதலால் ஏற்படும் சிக்கல்கள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள்; அரசு அமைப்புகள் அதில் உள்ள உயர் சாதிகளின் வலிமைகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் (விவசாயிகள், தாசிகள், வாயிற் காவலன், விசிறி வீசுபவன்) என தொகுத்து கொள்ளலாம்_.
விளிம்பு நிலை மக்கள் என சொல்லும் போதே அவை பெரும்பாலும் அரசியல் கேள்வியாகவே பார்க்க படுகிறது.ஒரு வரலாற்று நாவல் ஏதாவதொரு தத்துவத்தைப் பற்றியோ அல்லது தனிப்பட்ட மனிதனைப் பற்றியோஅல்லது ஒரு குறிப்பிட்ட விசயத்தை பற்றியோ மையமாக வைத்து எழுதப்படாமல்,வரலாற்றையே நாவலின் மையமாக வைத்து எழுதும்போது, இப்படிப்பட்ட கேள்விகள் நியாயமாகவே படுகிறது.காலத்தால் அழிந்து போன முகமில்லாத ஒரு விளிம்பு நிலை மனிதனை உருவாக்குவது , புனைவுலகில் எழுத்தாளனுக்கு ஒரு சவால் என்றே கருதுகிறேன்.
முதன்முதலாக கழிப்பறையை அறிமுகம் செய்யும் போது மக்களின் மனநிலையில் ஏற்படும் ஒவ்வாமை,ஒரு வாயில் காவலன் ஃப்ரெஞ்ச் அதிகாரி போல் பாவனை செய்வது ,தாசிகளை சீண்டும் ஃப்ரெஞ்ச் காவலாளியின் காதை அறுத்து சிறையில் அடைக்கும் ஃப்ரெஞ்ச் அரசு;அதே தாசிகளிடம் அத்து மீறி நடக்கும் உயர் சாதிகள் (தாசி இல்லாத ஊரில் மழைஎப்படி பெய்யும் என சொல்லும் ஒரு கும்பல்),சாதி என்று வரும் போது பிரிந்து சண்டைபோடுவதும் மதப் பிரச்சினை என்றால் ஒன்றாக சேர்வதும் இதை கண்டு ஃப்ரெஞ்ச் அரசு குழப்பம் அடைவதும் போன்ற முரண்பட்ட சமூக பண்பாட்டு சிக்கல்களை காணலாம்.
அரியணையை சுற்றி நிகழும் அரசியல் நிகழ்வுகள் சமகால அரசியலுடன் பொருந்திப் போகின்றது.சூழ்ச்சி செய்து அரசை கவிழ்த்து அரியணை ஏறும் மன்னர்கள் பின்பு போகத்தில் திளைக்கின்றனர்.பல மன்னர்கள் சூழ்ச்சியால் மாற்றப்பட்டாலும் உயர் சாதி அதிகாரிகள் தொடர்ந்து நீடித்தனர். அவர்களை பகைத்துக் கொள்ள எந்த அரசும் விரும்பவில்லை.அரசுகளுக்கிடையேயான முக்கிய தகவல்கள், பேரங்கள் இவர்கள் வழியாகவே நடை பெற்றது.
*ஃப்ரெஞ்ச் அரசு மராட்டிய அரசுக்கு ஒயின் பாட்டில்கள் அனுப்பி போரை நிறுத்தி சமரசம் செய்வதை முக்கிய குறியீடாக காணலாம்.*
இந்த நாவல் ஃப்ரெஞ்ச் அரசு செய்த கொடுமையான கால கட்டங்களையெல்லாம் தவிர்த்து,டூமாஸ் என்ற கனிந்த மனிதனின் ஆட்சி காலத்தை மட்டுமே பேசுவதால்,ஃப்ரெஞ்ச் அரசின் மேல் நமக்கு அபிப்பிராயமான பார்வையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.இவருக்கு பின்பு வந்த டூப்லெக்ஸின் ஆட்சி காலம் மிக மோசமானது.
_ஒரு பெரிய இராணுவ படை சாதாரணமாக ஒரு வயலில் நடந்து செல்வதும்,அது ஒரு விவசாயியின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவு முக்கியமான படிமம்_.
_குருசு என்ற கதாபாத்திரத்தின் ஆரம்பம் , இறுதியில் அது மேற்கொள்ளும் வாழ்வும் கவனிக்க வேண்டியது_.
சில இடங்களில் வரும் முற்போக்கு கருத்துக்கள் கதை ஓட்டத்தை தடை செய்வது, தனியே தெரிகிறது.
கிட்டத்தட்ட ஆவணமே இல்லாமல், வரலாறு என்பதே காணல் நீர் போன்று இருக்கும் நமது நாட்டில், வாழும் காலத்திலே ஆவணம் செய்யப்பட்ட நிகழ்வுகளை கொண்டு இந்த நாவல் எழுதப்பட்ட தால், அதன் Authenticityகாகவும் அதன் செறிவுக்காவும் இது ஒரு முக்கியமான நாவல் ஆகும்!
நவீன் சங்கு, கோவை